... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

காம அஸ்திரங்கள்! பாகம்-38


சோழ நாட்டின் சுடர் விளக்கு, காஞ்சியை மீட்கவந்த காவல் தெய்வம், பரதம் போற்றிய மாவீரன், சாளுக்கிய மகாராணியின் சொகுசுச்சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதை அன்று மாலையே இன்பநாயகியும், ரஞ்சனாவும் அறிந்துகொண்டார்கள். செய்தி கேட்டு இன்பநாயகி துவண்டு போய்விட்டாள். இனி அவன் கதி அதோகதியென்று நினைத்தவள் தன்னுடைய ஆள் அனுப்பும் முயற்சியை இத்தோடு கைவிட்டுவிடவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.

ரஞ்சனா படுக்கையில் குலுங்கி குலுங்கி அழுதாள். நீண்ட நேரம் அழுது அழுது கண்கள் சிவந்தவள் ஒரு தீர்மானத்துடன் எழுந்து தன்னை அலங்காரம் செய்துகொண்டு வரதராஜன் ஆலயத்தில் இருட்டும் வரை மனமுறுக பிரார்த்தனை செய்தாள். அதன் பின்னர் நேரே அரண்மனைக்குச் சென்று இளவரசியை சந்திக்க வேண்டுமென்று பணிப்பெண்களிடம் சொல்ல அரை நாழிகை காத்திருப்புக்குப்பின் அனுமதி கிடைத்தது.

கருணாகரன் அடைக்கப்படுவிட்டது காஞ்சனாவின் காதுகளுக்கும் எட்டியதால் தன் காதலன் இத்தோடு மடிந்தான் என்று எண்ணி பெரும்துயரங்கொண்டாள். மறக்க குலத்தில் பிறந்த வீராங்கனையாதலால் அவள் கண்ணில் சொட்டு நீர் கூட வரவில்லை. ரஞ்சனா காஞ்சனாவைச் சத்தித்ததும் கண்ணீர் ஆறாகப்பெருக குலுங்கி குலுங்கி அழுதாள்.

“ ரஞ்சனா, அன்றே நான் சொன்னேன், அவர் கேட்கவில்லை. இப்போது அவர் கதி யாருக்கும் தெரியவில்லை. இனி அழுது என்ன பயன். “ என்றுரைத்தாள் இளரவரசி காஞ்சனா தேவி.

“ இளவரசி, தாங்கள் மனது வைத்தால் அவரைக் காப்பாற்ற முடியுமே.” ரஞ்சனா கெஞ்சினாள்.

அன்னையின் ஆனையை மீறி தன்னால் கூட எதுவும் செய்ய இயலாது என்பது காஞ்சனாவுக்குத் தெரியும். அதை ரஞ்சனாவும் உணர்ந்தேயிருந்தாள். இருப்பினும் காதலின் வேகம். அது தந்த அசட்டுத்தனம் இரண்டும் சேர்ந்து ரஞ்சனாவை இங்கே வரவழைத்துவிட்டது.
இளவரசி எதுவும் பேசவில்லை. ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ரஞ்சனாவிடம் தன் ஆடைகளை கொடுத்து அணியச்சொன்னாள். காரணம் ஏதும் கேட்காமல் ஆடைபுணைந்த ரஞ்சனாவின் விரலில் தன் முத்திரை மோதிரத்தை அணிவித்துவிட்டு “ ரஞ்சனா, நான் ஏதும் செய்ய இயலாத நிலையிலிருக்கிறேன். நீ நேரே நந்தவனத்துக்குச் செல். தடாகக்கரையில் காத்திரு. உனக்கு அதிர்ஷ்டமிருந்தால் அவரை சந்திக்கலாம். ஆனால், இங்கிருந்து வெளியேற்ற மட்டும் முயற்சிக்காதே. அப்படிச்செய்தால் அவரின் ஆயுள் அப்போதே முடிந்துவிடும். இதை அவரிடமும் சொல்லிவிடு “ என்று சொல்லிவிட்டு ரஞ்சனவுக்கு விடை கொடுக்க, ஏதோ புதிய சக்தி பிறந்த நம்பிக்கையுடன் ரஞ்சனா யாருமறியாமல் நந்தவனத்துக்குள் புகுந்து தடாகக்கரையில் தவமிருக்கத்தொடங்கினாள்.

முதல் ஜாமம் முடிந்ததற்கான மணியோசை கணீரென்று கேட்டது. ரஞ்சனா மூச்சைப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். கருணாகரன் எங்கிருந்து வருவான். எப்படி வருவான். இதெல்லாம் நடக்குமா என்று ஆயிரம் கேள்விகள் அவள் உள்ளத்தை துளைக்க கடக்கும் ஒவ்வொரு வினாடியும் யுகமாகவே கழிந்தது. சட்டென்று ஒரு உருவம் ரஞ்சனாவை நெருங்கி அவள் வாயைப் பொத்தியபடி மரக்கூட்டத்தில் இழுக்க ரஞ்சனா செய்வறியாது திகைத்தாள்.

” காஞ்சனா.! நான் தான் கருணாகரன் “ என்று அவன் காதில் கிசுகிசுக்க குரலால் அவன் தானென்று உறுதியானதால் ரஞ்சனாவின் இதயம் அதீத சந்தோசத்தில் வெடிக்கும் நிலைக்கே போய்விட்டது. இருப்பினும் அவன் காஞ்சனாவை அங்கே எதிர்பார்த்திருக்கிறான் என்பதையறிந்து சற்றே துயரமும் கொண்டாள்.

“ அத்தான் “ என்றதும் கருணாகரனும் அதிர்ச்சியுற்றான்.

“ ரஞ்சனா.! நீயா.! நீ எப்படி இங்கு வந்தாய் “

“ இளவரசிதான் என்னை அவர்களுடையில் இங்கே அனுப்பி வைத்தார்கள். நீங்கள் இருவரும் இங்குதான் சந்தித்துகொள்வீர்களா “ என்று கேட்டாள்.

” இல்லை.! ஒரு முறை தான் சந்தித்தேன். ரஞ்சனா, நீ வந்தது பெரும் பாக்கியம். நான் சொல்வதை நன்றாகக்கேள். இந்த ஓலையை எப்படியாவது ஏரிக்கரையில் சொக்கப்பனிடம் சேர்த்துவிடு. உன் உயிர் போனாலும் இந்த ஓலை வேறு எவரிடமும் சிக்கக்கூடாது. காஞ்சியின் இளவரசியையும் சேர்த்துத்தான். உடனடியாக இங்கிருந்து போய்விடு. “ என்று சொல்லிவிட்டு ஓலையை அவளிடம் தினித்தான்.

“ அத்தான், நீங்கள் எக்காரணமும் கொண்டும் இங்கிருந்து தப்பிக்க முயலவேண்டாம் என்று இளவரசி சொல்லியனுப்பினார்கள். “
“ என்னைப் பற்றி கலங்காதே ரஞ்சனா. விரைவில் காஞ்சி வீழும் என்பதை மட்டும் உன் அன்னையிடம் சொல்லிவிடு. நான் வருகிறேன். “ என்றவன் ஒரு வினாடி தாமதித்து ரஞ்சனாவை ஆரத்தழுவி முத்தமிட்டான். தன் குறுவாளை எடுத்து அவளிடம் கொடுத்து ‘இது உன்னையும் சோழ நாட்டையும் காக்கட்டும்’ என்று சொல்லி சட்டென்று விலகி பொன்னேரியை நோக்கி நடந்தான்.

நடந்தது கனவா அல்லது நினைவா.! என்று ரஞ்சனாவினால் நம்பவேமுடியவில்லை. ஓலையை பத்திரப்படுத்திக்கொண்டு குறுவாளை இடையில் செருகியவள் வேகமாக காஞ்சனாவின் அறைக்குச் சென்றாள்.

“ அவரைக் கண்டாயா “ ஆவலுடன் கேட்டாள் காஞ்சனா.

“ கண்டேன் இளவரசி. இதற்கு மேல் என்னை எதுவும் கேட்காதீர்கள். எனக்கு உத்தரவு கொடுங்கள். “ என்று ரஞ்சனா சொன்னதும் காஞ்சனா சற்று நேரம் சிந்தித்தாள். காஞ்சியின் விதி ரஞ்சனாவின் கையில் சிக்கிவிட்டதை உள்ளுணர்வு உணர்த்தினாலும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல்  “ சரி நீ போகலாம் “ என்று உத்தரவு கொடுத்தாள்.

ஆடைகளை மாற்றிக்கொண்டு காற்றிலும் கடுகி ரஞ்சனா இல்லத்தையடைந்தாள். இன்ப நாயகியிடம் செய்தியை சுருக்கமாக சொல்லிவிட்டு மூடுதேரில் ஏரிக்கரையை நோக்கி விரைந்தாள். செய்தி கேட்டதும் ஓலையை வாங்கிக்கொண்டு கருணாகரனின் புரவியிலேறி சோழ நாட்டை நோக்கி விரைந்தான் சொக்கப்பன்.

ரஞ்சனாவிடம் ஓலயைக்கொடுத்து விட்டு ஏரிக்கரையை நோக்கி நடந்த கருணாகரன் அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டான். அம்பிகாதேவியின் பஞ்சனையில் ஒற்றனின் செய்தி கேட்டதுமே அவனுக்கு சுய புத்தி வந்துவிட்டது. சோழ நாட்டின்  படைதிரட்டும் ரகசியத்தை அம்பிகாதேவி அறிந்துகொண்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாரவாள் என்றுணர்ந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் மயக்கத்திலிருப்பதாகவே நடித்தான். 

அத்தோடு, ராதையை விரட்டும் போது ‘மகாராணியின் படகோட்டத்துக்கு தயார் செய்யவேண்டும்’ என்று வாசுகி உளறிவிட்டது அவது மூளையை படுவேகமாக சுழலச்செய்தது. அம்பிகாதேவி காஞ்சியின் பாதுகாப்புக்கான வேலைகளில் இறங்கிவிட்டாள். இரண்டு நாட்களாக பணிப்பெண்கள் சூழ்ந்திருந்த தனது அறை உணவுகளாலும், மதுவாலும் நிரப்பப்பட்டுவிட்டதால் தன்னை சிறைவைத்திருக்கிறாள் என்பதும் தெளிவாக தெரிந்துவிட்டது.

சாளுக்கியர்களின் பின்புறப்படை ரகசியத்துக்கும் படகோட்டத்துக்கும் நிச்சயம் தொடர்பிருக்க வேண்டுமென உறுதியாக நம்பியவன் இறுதிவரை போதையில் கட்டுண்டு கிடப்பதாகவே நடித்ததை அரண்மனைவாசிகள் அனைவரும் நம்பிவிட்டது அவனுக்கு பேருதவியாக போய்விட்டது.
சோழ நாட்டுக்கு செய்தியை தாயாரித்தவனுக்கு அதை அனுப்பும் வழி மட்டும் விளங்கவில்லை. படகோட்டத்தின் ரகசியத்தை அறியவே அவன் அறையை விட்டு வெளியேறினான். வரும் வழியில் தடாகக்கரையில் அமர்ந்திருப்பது காஞ்சனா என்று நினைத்தவன் அவளறியாமல் சென்றுவிட எண்ணினாலும் காதலின் வேகம் தந்த அசட்டு தைரியத்தில் அவளைச் சந்திக்க முற்பட்டான். ஆனால் அங்கே ரஞ்சனாவைக் கண்டதும் அவனது பணி எளிதாகிவிட்டது. சாளுக்கியர்களின் வீழ்ச்சிக்கு சாளுக்கிய இளவரசியே தன்னையறியாமல் உதவிவிட்டாள்.

காதல் மனிதனை என்ன பாடுபடுத்துகிறது.! காதலின் மகத்துவத்தை வியந்துகொண்டே பொன்னேரிக்கரையை அடைந்தான். எரிக்கரையில் தீப்பந்தங்கள் நடமாடின. சிறிதுமல்லாமல் பெரிதுமல்லாமல் ஒரு சொகுசுப்படகு நங்கூரமிட்டு நீரில் தள்ளாடிக்கொண்டிருந்தது. கரையில் வாசுகி நின்றிருந்தாள். கருணாகரன் மூச்சை அடக்கிக்கொண்டு அங்கு நடப்பதை கவனித்தான்.

“ ம்ம் சீக்கிரம் புறப்படுங்கள். மாகாராணி தயாராகிவிட்டார்கள் “ என்று சொல்லிவிட்டு அரண்மனையை நோக்கி நடக்க அவளைத் தொடர்ந்து பூரணகவசமனிந்த  எட்டு வீரர்கள் சென்றார்கள்.

அரவம் அடங்கியதும் கருணாகரன் படகினை நெருங்கினான். படகின் மேல் தளத்திலும் இன்னும் பல வீரர்கள் இருந்தார்கள். துடுப்புத்துழாவுபவர்களின் அரவம் கீழறையில் கேட்டது. நீண்ட நேரம் படகின் அமைப்பை ஆராய்ந்தான். படகின் முகப்புப்பகுதி படமெடுக்கும் நாகத்தின் தலை போல அமைக்கப்பட்டு பின் பகுதி நீண்டிருக்கும் பாம்பின் வால் போன்றிருந்தது. வால் பகுதி அளவுக்கு அதிகமாக நீட்டிக்கொண்டிருந்ததால் அதன் கீழே இருப்பதை படகிலிருந்து காணமுடியாது.

சத்தமில்லாமல் நீரில் இறங்கி உள் நீச்சலாகவே படகின் பின் பகுதியை அடைந்தான். வாலுக்கு கீழே ஆணிகளும் கொளுவிகளும் அடிக்கப்பட்டு பிடித்துக்கொள்ள வசதியாக இருந்தது. இதைப்பற்றிக்கொண்டால் படகின் ஓட்டத்தில் சென்றுவிடலாம். இரவு நேரமாக இருப்பதால் வெளியிலிருந்து யாரும் தன்னை பார்க்க முடியாது என்று தீர்மாணித்துக்கொண்டு கொளுவியைப் பற்றிக்கொண்டு காத்திருந்தான்.

ஒரு நாழிகை கழிந்ததும் கரையில் வெளிச்சம் தோன்ற படகின் மேல் தளத்திலும் ஆரவாரம் கேட்டது. கருணாகரன் நீரில் தலை மட்டும் தெரியும்படி மூழ்கிக்கொண்டு கவனித்தான். கரையில் உருவிய வாட்களுடன் வீரர்களுக்கு நடுவில் சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவி வந்துகொண்டிருந்தாள். இத்தனை தூரம் கால்நடையாக வரும் மகாராணி இவளாகத்தான் இருக்கவேண்டும் என்று வியப்பிலாழ்ந்தான் கருணாகரன். படகினை ஒட்டி பந்தங்கள் ஜொலிக்க நின்றவளை அருகில் கண்டதும் அவனுக்கு மூச்சே நின்றுவிட்டது.

அம்பிகாதேவின் தலையில் பெரும் நாகரத்தினம் பொறிக்கப்பட்ட கிரீடமிருந்தது. தீப்பந்த ஒளியில் நாகரத்தினம் சூரியனை உடைத்து சிதறவிட்டது போல அந்த இடத்தையே ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்துக்கொண்டிருந்தது. அவளின் பளபளக்கும் நீலமணிக் கண்களும், நாகரத்தின கிரீடமும் அவளை நாகதேவதையாகவே அடித்தன.

இறக்கப்பட நூலேணியில் சரளமாக அவள் ஏறியதும் காவலர்களும் பின்தொடர்ந்து ஏறினார்கள். சற்று நேரத்தில் நங்கூரம் இழுக்கப்பட்டு துடுப்புகளும் துழாவப்பட நீரைக் கிழித்துக்கொண்டு படகு வேகமாகச் சென்றது. காவிரியின் புதுவெள்ளத்தில் அனாயசமாக நீந்தும் கருணாகரன் முகத்திலடித்த நீரினை அலட்சியம் செய்தவனாக கொளுவியை இறுக்கமாகப்பிடித்துக்கொண்டு படகோட்டத்துடன் சென்றான்.

ஓடும் படகின் திசையை கவனித்தவன் உள்ளம் மெல்ல நடுங்க ஆரம்பித்தது. படகு எதிரேயிருந்த நாகர்மலையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. காஞ்சியில் எத்தனை அரசர்கள் மாறினாலும் யாரும் நாகர் மலைப்பக்கம் போவதுமில்லை. அதை கண்டுகொள்வதுமில்லை. நாகர்மலைப்பிரதேசம் முழுவதும் காட்டுவாசிகளும் கொடும் நாகர்களும் மட்டுமே வசித்து வந்தார்கள் அந்த மலையைச் சுற்றிலும் அடர்ந்த பெரும் காடு இருந்தது. அந்தக் காட்டைக் கடந்து மலையின் அப்புறம் நாகர் வசிப்பதாக கூறுவதுண்டு. இருப்பினும் அங்கே சென்றவர்கள் யாரும் திரும்பியதாக சரித்திரமில்லை.

அந்த காடு முழுவதும் கடும் நஞ்சுத்துவம் வய்ந்த நாகங்களும், பெரும் சர்ப்பங்களும் நிறைந்து கிடக்கும். அதையும் தாண்டி மலையை ஏறி கடந்தால் கொடும் விசம் தீட்டப்பட்ட நாகர்களின் அம்புக்கு இறையாகிவிடுவார்கள். மேலும் நாகர்களில் நரமாமிசம் உண்பவர்களும் அந்த பிரதேசத்தில் இருக்கிறார்கள் என்றும் அவன் கேட்டதுண்டு. இப்படிப்பட்ட கொடிய மலைப்பிரதேசத்துக்கு நள்ளிரவில் சாளுக்கிய மகாராணி ஏன் செல்கிறாள்.! என்று குழம்பினான்.

அவன் சிந்தை இப்படி பலவாறு சுழன்றுகொண்டிருக்க இரண்டு நாழிகை பயணத்தில் நாகர்மலையின் அடிவாரம் புலப்பட்டதும் படகின் வேகம் குறைந்தது. ஆடி அசைந்து படகு நின்றதும் ஏற்பட்ட நீரில் அலைகளிலேயே கருணாகரன் உள்நீச்சலாக படகுக்கரையிலிருந்து சற்று தூரம் சென்று புதராக வளர்ந்திருந்த நானல்களினூடே மறைந்தான்.

பாம்பைக் கண்டால் படையும் அஞ்சும் என்று சொல்வதைப்போல வீராதி வீரர்களையெல்லாம் கண்டு அஞ்சாத கருணாகரன் இருட்டில் எந்த சர்ப்பமும் தன்னை தீண்டிவிடக்கூடாது என்று சற்று சலனத்தோடே படகினை நோட்டமிட்டான். மகாராணியும் மற்றவர்களும் இறங்கியதும் அவள் முகத்துக்கெதிரே தூக்கிப்பிடித்த தீப்பந்தத்தால் சிதறிய நாகரத்தினத்தின் அபூர்வ ஒளியில் பாதை பளிச்சென்று தெரிய வீரர்கள் புடை சூழ அம்பிகாதேவி மலைப்பாதையில் ஏறத்தொடங்கினாள்.

அவர்கள் செல்லும் பாதையை குறிவைத்தபடியே இடைவெளி விட்டு வேறு புறமாக பின்தொடர்ந்து சென்றான். மலை ஏறுவதே பெரும் சிரமம். இருளில் அதிலும் பாதையே இல்லாத மலையில் கருணாகரன் மிகவும் சிரமப்பட்டே ஏறினான். அம்பிகாதேவி

செல்லும் வழியிலும் பாதையென்று ஏதும் இருப்பதாக தோன்றவில்லை. அவளும் மற்ற வீரர்களும் சிரமப்பட்டே ஏறினார்கள். இரண்டு நாழிகை இப்படியே தட்டுத்தடுமாறி சென்று மலையுச்சியை நெருங்கினான். அங்கிருந்து மலைச்சரிவு அடர்ந்த காட்டுக்குள் இறங்கியது.

அம்பிகாதேவி சற்று ஓய்வெடுத்துவிட்டு இறங்க ஆரம்பித்தாள். மெல்லிய நிலவொளியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காடும் வெகுதூரத்தில் மீண்டும் மலைத்தொடரும் தெரிந்தன. இத்தனை தூரம் இவளால் நடக்க முடியுமா. அல்லது இங்கு ஏதும் தங்குமிடம் இருக்குமா.! என்று விடைகிடைக்காத கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொண்டு கருணாகரனும் மலையிறங்கினான். தாகம் நாவரண்டு போனது. இருப்பினும் கடமை தந்த உந்துதலில்  வேகமாகவே நடந்தான். ஒருவழியாக இறக்கம் முடிந்ததும் சமதளக் காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தார்கள்.

அரை காத தூரம் நடந்த அம்பிகாதேவி மீண்டும் ஓய்வெடுத்தாள். கருணாகரன் சற்று நெருங்கியே வந்துகொண்டிருந்ததால் அவனும் ஓய்வெடுக்க எண்ணி ஒரு மரத்தின் மீது சாய்ந்தான்.

சட்டென்று காலில் ஏதோ தீண்டியது போல உணர்ந்து காலை உதறினான். அவனைத் தீண்டிய சர்ப்பம் தூரத்தில் போய்விழ, கருணாகரனுக்கு தலைசுற்றியது. விஷம் மெல்ல மெல்ல உடலில் பாய அங்கேயே சுருண்டு விழுந்துவிட்டான். அவன் விழுந்த சிறிது நேரத்தில் அம்பிகாதேவி தன் பயணத்தை தொடங்கி காட்டுக்குள் மறைந்துவிட்டாள்.

0 Comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!